Wednesday, 18 August 2021

கம்பன் கவிநயம்-5(விசுவாமித்ரர் வேள்விகாக்க ராமனை வேண்டுதலும் தயரதன் நிலையும்)

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

   விசுவாமித்ர மாமுனி தான் நடத்தும்  வேள்விக்கு அரக்கர்களால் ஏற்படும் இடையூறுகளை தகர்க்க ராமபிரானை தன்னுடன் அனுப்புமாறு  தயரதன் மன்னனிடம் வேண்டுகிறார். இது தயரத மன்னனுக்கு எமன் தன் உயிரை கேட்பது போல் இருந்ததாம். இதை பாலகாண்ட த்தில் கையடைப்படல த்தில் கம்பர்  இவ்வாறு பாடுகிறார்.

"தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு

   இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
   நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
   நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
   கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்."
நின் சிறுவர் நால்வரின் கரியசெம்மல் - ராமன்
கொடுங்கூற்றின் - கொடிய எமன்.

விசுவாமித்ரரின் இந்த பேச்சைக் கேட்டவுடன் தயரதன் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. மன்னனின் நிலையை கம்பன் இவ்வாறு படம்பிடித்து காட்டுகிறார்.
"எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்".
எண்ணிலடங்கா தவம் செய்த விசுவாமித்ரர் சொன்ன இந்த சொல் தயரதனுக்கு நெஞ்சில் வேல் பாய்ந்த புண்ணில் நெருப்பு கனல் ஒன்று நுழைந்தால் என்ன வேதனை தருமோ அதுபோல் இருந்ததாம். மேலும் மன்னன் நெஞ்சில் நீண்ட நாளாக இருந்து வந்த துயரம் ஒன்று இப்போது நினைவில் வந்து தோன்ற , தன் ஆருயிர் ஊசலாட 
கண் பெற்ற குருடன் கண் மீண்டும் குருடானால் எப்படி இருக்குமோ அப்படி உழந்தானாம் தயரத மன்னன் .
  இதில் "உண்ணிலாவிய துயரம் பிடித்து உந்த "என்ற வரியில் கம்பன் தயரத மன்னன் பெற்ற சாப த்தை குறிப்பாக உணர்த்துகிறார்.
முன்பொருமுறை தயரதன் வன வேட்டைக்கு சென்ற போது கண்ணில்லா தனது பெற்றோர்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் மொண்டுகொண்டிருந்த ஜலபோஜனன் மகனை யானை என தவறாக நினைத்து அம்பை எய்தி கொன்று விட்டார். இது கேள்விப்பட்ட ஜலபோஜன் விட்ட சாபம் தயரதன் தன் மைந்தனை விட்டு பிரிந்து தன்னைப்போல்  துன்பம் அடைவான் என்பதே.  
இந்த நிகழ்வு தயரதருக்கு இப்பொழுது வந்து போகிறது.
இந்த சாபம் பற்றிய உண்மையை கைகேயியின் இரு வரத்தால் ராமன் வனவாசம் செல்லும்போது கோசலையிடம் கூறுகிறார். இது அயோத்தியா காண்டத்தில் நகர்நீங்கு படலத்தில் கம்பரால் கீழ்க்கண்ட பாடல் மூலம் பாடப்பெறுகிறது.
"பொன் ஆர் வலயத் தோளான்,
     கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது
     ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன்
     மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம்
     அவளுக்கு அரசன் அறைவான்'.


இடம்-
தென்காசி                           அன்புடன்
18.08.2021.          ‌‌‌‌             // க. மாரியப்பன்//








   

Friday, 6 August 2021

கம்பன் கவிநயம்-4(அயோத்தி நகர மாந்தர்கள் பரதனை விட ராமனை நேசித்தது ஏன்?)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

  அயோத்தி நகர மாந்தர்கள் ராமனை வனவாசம் செல்ல தயரத மன்னன் ஆணையிட்டார் என கேட்டதும்  மிகவும் துக்கமும் கோபமும் கொண்டணர். பரதன் எல்லாம் இந்த மண்ணை ஆள முடியாது என கோபத்தில் ஏசினர். ஏன் இந்த அயோத்தி நகர மாந்தர்கள் ராமனை நேசிப்ப தும் பரதனை வெறுக்கவும் செய்தனர். இத்தனைக்கும் பரதன் அம்மக்கள் மீது எப்போதும் வெறுப்பு காண்பித்ததே இல்லை. 

கம்பன் அயோத்தி நகர மாந்தர்கள் நிலையை ,ராமனை வனவாசம் செல்ல  சக்ரவர்த்தி ஆணையிட்டார் என  கேட்டபோது , அயோத்தியா காண்டம் நகர்நீங்கு படலத்தில் இவ்வாறு காண்பிக்கிறார்.

"கிள்ளையொடு பூவைஅழுத; கிளர் மாடத்து - உள் உறையும் பூசைஅழுத; உரு அறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என் சொல? - ‘வள்ளல் வனம் புகுவான் ’ என்று, உரைத்த மாற்றத்தால்.

கிள்ளை- கிளி , பூசை- பூனை

ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும் காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர் மாவும் அழுத; - அம் மன்னவனை மானவே.

‘ஆளான் பரதன் அரசு’ என்பார்; ‘ஐயன், இனி மீளான்; நமக்கு விதி கொடிதே காண்’ என்பார்; கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான்’ என்பார்; ‘மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ என்பார்".

ராமன் வனவாசம் செல்ல ஆணையிடப்பட்டான் என்றவுடன் அயோத்தி மாநகரில் உள்ள ஓரறிவு உள்ள உயிரினங்கள் முதல் ஆறறிவு உள்ள மாந்தர்கள் வரை செடி கொடி கிளி பூனை ,யானை முதலிய அனைத்தும் அழுதன. நகர மாந்தர்கள் பரதன் இந்த நாட்டை ஆளமாட்டான் என சபி த்தார்கள்.இதற்கான முக்கிய ஊளவியல் காரணம் எதுவெனில் " மக்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என பார்க்கும் முன்பு அந்த மனிதன் தங்களை(மக்களை) பார்க்கும் போதெல்லாம் நலம் விசாரித்தால் அவன் மீது அவர்களுக்கு ஒரு பாசம் வந்து விடும். அப்போது இந்த நபருடன் தாங்கள் பார்க்காத,அல்லது  இவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாத இன்னொரு நபரை பற்றிய விமர்சனம் வரும்போது மக்களின் அனுதாபம், பாசம் பரிவு எல்லாம் அந்த நலம் விசாரிக்கும் நபர் மீதுதான் வரும்.அந்த இரண்டாவது நபர் மீது ஆத் திரம், கோபம் எல்லாம் வரும். 

அதுபோலத்தான் அயோத்தி நகர மாந்தர்கள் ராமனை கொண்டாடினர் பரதனை இகழ்ந்தனர். 

ராமன் சிறு வயதில் இருந்து தன் எதிர் வரும் மக்களை கண்டவுடன நலம் விசாரிப்பான். "நீங்கள் நலமா? உங்கள் மனைவி மக்கள் நலமா? வேலை எப்படி? குறைகள் ஏதும் உள்ளதா?" என்று. இதை கம்பன்  தனது பாலகாண்டத்தில் திரு அவதார படலத்தில் இப்படி  கூறுகிறார்.

"எதிர் வரும் அவர்களை எமையுடை இறைவன். முதிர் தரு கருணை யின் முகமலர் ஒளிரா. ‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்? மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே".

இந்த வழியை அரசியலில் எம்ஜிஆர் அவர்கள் கடைப்பிடித்து வெற்றி கண்டார். இந்த வழியை சிவாஜி அவர்கள் கடைப்பிடிக்காததால் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நல்லவனா , கெட்டவனா என்று தனது சுயநலம் சார்ந்தே தீர்மானிக்கிறான் என்பது கம்பனின் முடிவு.

இடம்-
தென்காசி                           அன்புடன்
06.08.2021.          ‌‌‌‌             // க. மாரியப்பன்//


Thursday, 5 August 2021

கம்பன் கவிநயம்-3(ராமன் மற்றும் உடன்பிறந்தோர்கள் வயது வித்தியாசம்)

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

   நம்மில் பெரும்பாலானோர் க்கு  ராமன்,பரதன்,லட்சுமணன், மற்றும் சத்ருக்கனன் இவர்களின் வயது வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. காரணம் சினிமா திரையில் அல்லது சின்ன திரையில் அவர்களை நாம் பார்த்து பழகியவிதம் அப்படி. ஆனால் உண்மையில் அவர்கள் நால்வருக்கும் ஒவ்வொரு நாட்கள் தான் வயது வித்தியாசம்.

ராமன் பிறந்தது புனர்பூசம் நட்சத்திரம்.

"ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லை யின் . 

மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.  வேய் புனர்பூசமும்  விண்ணுளோர்களும்.  தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே".

" அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் காட்டும் ஜோதியை திரு வுறப்பயந்தனள்-

திறம் கொள் கோசலை".


 அதற்கு மறுநாள்        

பரதன் பிறந்தது பூசம் நட்சத்திரம் .

"ஆசையும். விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ.  வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,  பூசமும் மீனமும் பொலிய. நல்கினாள்.  மாசு அறு கேகயன் மாது மைந்தனை".

கேகயன் மாது- கைகேயி

அதற்கு மறுநாள்

லட்சுமணன் பிறந்தது ஆயில்யம் நட்சத்திரம்.

"தலை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்.  கிளையும். அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற அளை புகும் அரவினொடு அலவன் வாழ்வுற இளையவற் பயந்தனள். இளைய மென்கொடி "

இளைய மென்கொடி- சும த்திரை.

அரவின் என்றால் ஆயில்யம் நட்சத்திரம்.

அதற்கு மறுநாள்

சத்ருக்கனன் பிறந்தது மகம்  நட்சத்திரம்.

"படம் கிளர் பல்தளைப் பாந்தள் ஏந்து பார்  நடம் கிளர் தர. மறை நவில நாடக மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட.  விடம் கிளர் விழியினாள். மீட்டும். ஈன்றனள்".

மீட்டும் ஈன்றனள்- சும த்திரை இரண்டாவதாக சத்ருக்கனை ஈன்றாள் என்பதாகும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில்  ஜாதகப்படி சத்ருக்கனுக்கு சூரியன் உச்சம் ,சிம்மராசி மகம் நட்சத்திரம் ஆயினும் அவனுக்கு அரியணை ஏறும் வாய்ப்பு கிட்டவில்லை.

ராமன் 14 வருட வனவாசம் முடிந்தும் அரசு ஏற்க வரவில்லை என அறிந்து அரச பொறுப்பை துறக்க முற்படும் போது வசிட்டர் முதலானோர் சத்ருக்கனை வேண்ட சத்ருக்கனோ மறுத்து விட்டான்.

ஜாதகப்படி வாய்ப்பு தேடி வந்தபோது அதை ஏற்கவில்லை. சத்ருக்கன் கூறுகிறான் " நிலமகளை துறந்து வனமகளை நாடிச் சென்றவன் பின் சென்றான் ஒரு தம்பி(லட்சுமணன்), அப்படி  கானாளச் சென்றவன் வாராது குறித்து வருந்தி உயிர் துறக்க துணிந்தான் ஒரு தம்பி(பரதன்). இப்படி பட்ட தம்பிகளுக்கிடையே வெட்கமில்லாமல் நானோ அரசாள்வ து ?.இது என்னே அரசாட்சி ". என்று வந்த வாய்ப்பை ஏற்க மறுக்கிறான். 

"கானாள நிலமகளை கைவிட்டு போனானை காத்து பின்பு போனானும் ஒரு தம்பி, 

போனவன் தான் வரும் அவ திபோயிற்று என்னா ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி, அயலே நாணாது யானாம் இவ்வரசாள்வேன்? என்னே, இவ்வரசாட்சி ! இனி தே அம்மா!".


இடம்-
தென்காசி                           அன்புடன்
05.08.2021.          ‌‌‌‌             // க. மாரியப்பன்//
 




Sunday, 1 August 2021

கம்பன் கவிநயம்-2 ( கடவுள் ,மதம் பற்றி கம்பனும் கண்ணதாசனும்)


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

    கம்பனது கவித் திறமையை பற்றி கூறுவது என்பது ஒரு நல்ல  திரைப்படம் பார்த்த வாய் பேசமுடியாத ஒருவன் அந்த கதையை முழுவதுமாக விளக்கினால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது நான் கொண்ட இந்த முயற்சி. 

வாங்க அரும்பாதம் நான்கும்
   வகுத்த வான்மீகி அன்பான்.
தீம் கவி. செவிகள் ஆரத்
   தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு. அவன்புகழ்ந்த நாட்டை.
   அன்பு எனும் நறவம் மாந்தி.
மூங்கையான் பேசலுற்றான் என
   யான் மொழிய லுற்றேன்.

வானவர் புகழ் வான்மீகி எழுதிய ராம காதையை தான் பாடுவது கள்ளுண்ட ஊமையன் பேசுவது போன்றது என்கிறார் கம்பன் .


கவிஞர் கண்ணதாசன் " இறைவன் ஒருவனே அவன் கல்லாக பார்ப்பவனுக்கு கல், கடவுளாக பார்ப்பவனுக்கு அவன் இறைவன் , அவனை இல்லை என்றால் இல்லை உண்டு என்றால் உண்டு . மனிதன் தான் இறைவன்   தான் சார்ந்த மதத்தில் தான் இருக்கிறான் ,என மதச் சண்டையில் ஈடுபடுகிறான்". என்பார். இது கம்பனிடம் இருந்து கண்ணதாசன் அவர்கள் எடுத்து கையாண்ட தே. 

பார்த்தால் பசி தீரும் என்ற படத்தில் வரும் " உள்ளம் என்பது ஆமை " என்ற பாடல் வரிகளில் " தெய்வம் என்றால் அது தெய்வம் சிலை என்றால் அது வெறும் சிலைதான் , உண்டு என்றால் உண்டு ,இல்லை என்றால் அது இல்லை " என்ற வரிகள் மற்றும் 

பாவ மன்னிப்பு என்ற படத்தில் வரும் " மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்" என்ற பாடல் வரிகள்.

https://youtu.be/1WCxSHN4aUE

https://youtu.be/B1HufYvcLvY

கம்பன் பாலகாண்டம் ஆற்றுப்படலத் தில் 

மலையில் பிறந்த நதி கடலில் கலக்கும் முன் பல்வேறு கிளைகளாக பிரிந்து செல்வதை வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் நதியின் பிறப்பிடம்ஒன்றுதான் என தெரியாமல் தங்கள் பகுதியில் உள்ள நதிதான் அசல் நதி என்பது போல் சரயு நதி ஓடியது என்பார்.

கல்லிடைப் பிறந்து. போந்து.
   கடலிடைக் கலந்த நீத்தம்.

எல்லைஇல் மறைகளாலும் இயம்ப
   அரும் பொருள்ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றேஆகி.
   துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும்
   பொருளும்போல். பரந்து அன்றே. 

யுத்த காண்டத்தில் உள்ள பாடலில் கடவுள் பற்றி கூறும்போது இப்படி கூறுகிறார் கம்பர்.

'.                                                                   
ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;

'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;

'அன்றே' என்னின், அன்றே ஆம்;

'ஆமே' என்னின், ஆமே ஆம்;

'இன்றே' என்னின், இன்றே ஆம்;

'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;

நன்றே, நம்பி குடி வாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா



இடம்-
தென்காசி                           அன்புடன்
01.08.2021.          ‌‌‌‌             // க. மாரியப்பன்//