Wednesday, 18 August 2021

கம்பன் கவிநயம்-5(விசுவாமித்ரர் வேள்விகாக்க ராமனை வேண்டுதலும் தயரதன் நிலையும்)

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

   விசுவாமித்ர மாமுனி தான் நடத்தும்  வேள்விக்கு அரக்கர்களால் ஏற்படும் இடையூறுகளை தகர்க்க ராமபிரானை தன்னுடன் அனுப்புமாறு  தயரதன் மன்னனிடம் வேண்டுகிறார். இது தயரத மன்னனுக்கு எமன் தன் உயிரை கேட்பது போல் இருந்ததாம். இதை பாலகாண்ட த்தில் கையடைப்படல த்தில் கம்பர்  இவ்வாறு பாடுகிறார்.

"தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு

   இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
   நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
   நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
   கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்."
நின் சிறுவர் நால்வரின் கரியசெம்மல் - ராமன்
கொடுங்கூற்றின் - கொடிய எமன்.

விசுவாமித்ரரின் இந்த பேச்சைக் கேட்டவுடன் தயரதன் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. மன்னனின் நிலையை கம்பன் இவ்வாறு படம்பிடித்து காட்டுகிறார்.
"எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்".
எண்ணிலடங்கா தவம் செய்த விசுவாமித்ரர் சொன்ன இந்த சொல் தயரதனுக்கு நெஞ்சில் வேல் பாய்ந்த புண்ணில் நெருப்பு கனல் ஒன்று நுழைந்தால் என்ன வேதனை தருமோ அதுபோல் இருந்ததாம். மேலும் மன்னன் நெஞ்சில் நீண்ட நாளாக இருந்து வந்த துயரம் ஒன்று இப்போது நினைவில் வந்து தோன்ற , தன் ஆருயிர் ஊசலாட 
கண் பெற்ற குருடன் கண் மீண்டும் குருடானால் எப்படி இருக்குமோ அப்படி உழந்தானாம் தயரத மன்னன் .
  இதில் "உண்ணிலாவிய துயரம் பிடித்து உந்த "என்ற வரியில் கம்பன் தயரத மன்னன் பெற்ற சாப த்தை குறிப்பாக உணர்த்துகிறார்.
முன்பொருமுறை தயரதன் வன வேட்டைக்கு சென்ற போது கண்ணில்லா தனது பெற்றோர்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் மொண்டுகொண்டிருந்த ஜலபோஜனன் மகனை யானை என தவறாக நினைத்து அம்பை எய்தி கொன்று விட்டார். இது கேள்விப்பட்ட ஜலபோஜன் விட்ட சாபம் தயரதன் தன் மைந்தனை விட்டு பிரிந்து தன்னைப்போல்  துன்பம் அடைவான் என்பதே.  
இந்த நிகழ்வு தயரதருக்கு இப்பொழுது வந்து போகிறது.
இந்த சாபம் பற்றிய உண்மையை கைகேயியின் இரு வரத்தால் ராமன் வனவாசம் செல்லும்போது கோசலையிடம் கூறுகிறார். இது அயோத்தியா காண்டத்தில் நகர்நீங்கு படலத்தில் கம்பரால் கீழ்க்கண்ட பாடல் மூலம் பாடப்பெறுகிறது.
"பொன் ஆர் வலயத் தோளான்,
     கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது
     ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன்
     மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம்
     அவளுக்கு அரசன் அறைவான்'.


இடம்-
தென்காசி                           அன்புடன்
18.08.2021.          ‌‌‌‌             // க. மாரியப்பன்//








   

No comments:

Post a Comment